இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

104. உழவு (Farming) குறள்கள்

1031

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

பொருள்: உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

English Version

1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

பொருள்: உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

English Version

1033

உழுதுண்டு  வாழ்வாரே  வாழ்வார்மற்  றெல்லாம்
தொழுதுண்டு  பின்செல்  பவர்.

பொருள்: உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

English Version

1034

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

பொருள்: நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

English Version

1035

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

பொருள்: கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

English Version

1036

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

பொருள்: உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

English Version

1037

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

பொருள்: ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.

English Version

1038

ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

பொருள்: ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

English Version

1039

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

பொருள்: நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

English Version

1040

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

பொருள்: எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

English Version