இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

34. நிலையாமை (Instability) குறள்கள்

331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

பொருள்: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

English Version

332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந்  தற்று.

பொருள்: பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

English Version

333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

பொருள்: செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

English Version

334

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்

பொருள்: வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

English Version

335

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்

பொருள்: நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

English Version

336

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

பொருள்: நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

English Version

337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

பொருள்: அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.

English Version

338

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.

பொருள்: உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

English Version

339

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

பொருள்: இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

English Version

340

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

பொருள்: (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.

English Version