இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

65. சொல்வன்மை (Power of Speech) குறள்கள்

641

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.

பொருள்: நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

English Version

642

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.

பொருள்: ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

English Version

643

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கோளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.

பொருள்: சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

English Version

644

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.

பொருள்: சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

English Version

645

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

பொருள்: வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.

English Version

646

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

பொருள்: பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

English Version

647

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

பொருள்: தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.

English Version

648

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

பொருள்: கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

English Version

649

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

பொருள்: குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.

English Version

650

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

பொருள்: தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

English Version