இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

92. வரைவின் மகளிர் (Wanton Women) குறள்கள்

911

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.

பொருள்: அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.

English Version

912

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.

பொருள்: கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.

English Version

913

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.

பொருள்: பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

English Version

914

பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.

பொருள்: பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.

English Version

915

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

பொருள்: இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.

English Version

916

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.

பொருள்: அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.

English Version

917

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

பொருள்: நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.

English Version

918

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.

பொருள்: வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.

English Version

919

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

பொருள்: ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.

English Version

920

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

பொருள்: இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

English Version