இந்த ஆண்டு நடைபெற்ற குறள் தேனீப் போட்டி, ஒரு புதிய வடிவில், பல மாற்றங்களுடன் நடைபெற்றது. முதல் முறையாக இணையம் மூலமாக வட்டாரச்சுற்று, மண்டலச்சுற்று, காலிறுதி, அரையிறுதி என பலகட்டங்களாகப்
போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமார் 450 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதிச்சுற்றுப் போட்டியில் சுமார் 40 போட்டியாளர்கள் இராலே நகரில் நடைபெற்ற தமிழ் விழாவில் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று இருந்தனர். தவிரவும், அரையிறுதிப் போட்டி வரை கலந்து கொண்ட 60 போட்டியாளர்கள் பங்கேற்பு பதக்கங்களைப் பெற விழாவிற்கு வந்து இருந்தனர்.
இந்த ஆண்டு போட்டிகளுக்காக புதிய இணையத்தளம், புதிய மென்பொருள் என தொழில்நுட்பம் மூலம் போட்டி நடத்துவதை எளிமையாக்க முயற்சி செய்தோம். குறள் தேனீ இணையத்தளத்தில் அனைத்து குறள்களும் பொருளுடன் வழங்கப்பட்டன. திருக்குறளை அச்சு எடுத்துப் பயன்படுத்தும் வசதி, சான்றிதழ்களைத் தரவிறக்கும் வசதி என போட்டியாளர்கள்/பெற்றோர்களுக்குத் தேவைப்படும் அனைத்து தகவல்களும் ஓரிடத்தில் கிடைக்கும்படி மென்பொருள் உருவாக்கப்பட்டது. இறுதிச்சுற்றுப் போட்டிகள் முழுமையாக மென்பொருள் உதவியுடன் நடத்தப்பட்டது. அது போலக் குறள் தேனீ போட்டி ஒருங்கிணைப்பாளர்களின் வேலைச்சுமையைக் குறைக்க முழுமையாக நிர்வாக மென்பொருள் உருவாக்கப்பட்டது. இவை அனைத்துமே குறள் தேனீ தன்னார்வலக் குழுவால் உருவாக்கப்பட்ட செயலிகள் ஆகும்.
குறள் தேனீப் போட்டிக்கு முழு ஆதரவு அளித்த பேரவை நிர்வாகக்குழு, போட்டிக்கான கோப்பைகள், பதக்கங்களை வழங்கிய பேரவை விழாக்குழு, பரிசுத்தொகை வழங்கிய பேரவை மற்றும் ஹார்வேர்ட் தமிழ் இருக்கை நிறுவனங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறள் தேனீ போட்டி ஒரு கடுமையான போட்டியாக இருந்தாலும் அதில் ஆர்வத்துடன் பங்கேற்ற குழந்தைகள், பெற்றோர்கள், தமிழ்ப் பள்ளிகளுக்குப் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டி நடைமுறை இன்னும் மேம்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டு இன்னும் ஒரு சிறப்பான போட்டி நியூசெர்சி பேரவை விழாவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறள் தேனீ 2025 போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் – https://kuraltheni.com/winners-2025/
குறள் தேனீ 2025 இறுதிச்சுற்றில் பங்கேற்ற போட்டியாளர்கள் – https://kuraltheni.com/finalists-2025/
குறள் தேனீக் குழு – https://kuraltheni.com/coordinators/

நன்றி,
சசிகுமார் ரெங்கநாதன்
குறள் தேனீ
