திருக்குறள்
102. நாண் உடைமை (Shame) குறள்கள்
1011
கருமத்தால் நாணுதல் நாணுத்; திருநுதல் நல்லவர் நாணுப் பிற.
பொருள்: தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
English Version1012
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு.
பொருள்: உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.
English Version1013
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு.
பொருள்: எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
English Version1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை.
பொருள்: சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.
English Version1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு.
பொருள்: பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.
English Version1016
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர்.
பொருள்: நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.
English Version1017
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர்.
பொருள்: நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
English Version1018
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து.
பொருள்: ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
English Version1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை.
பொருள்: ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
English Version1020
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி யற்று.
பொருள்: மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
English Version