இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Conduct in the Presence of the King) குறள்கள்

691

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

பொருள்: அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.

English Version

692

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.

பொருள்: அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.

English Version

693

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

பொருள்: (அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.

English Version

694

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.

பொருள்: வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.

English Version

695

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

பொருள்: (அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.

English Version

696

குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில்
வேண்டுப வேட்பச் சொலல்.

பொருள்: அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.

English Version

697

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

பொருள்: அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.

English Version

698

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.

பொருள்: (அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

English Version

699

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

பொருள்: அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

English Version

700

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

பொருள்: யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.

English Version