திருக்குறள்
11. செய்ந்நன்றி அறிதல் (Gratitude) குறள்கள்
101
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது.
பொருள்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
English Version102
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
பொருள்: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப் பெரிதாகும்.
English Version103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது
பொருள்: இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்.
English Version104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.
பொருள்: ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
English Version105
உதவி வரைத்தன்று உதவி: உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.
பொருள்: கைம்மாறாகச் செய்யும் உதவி முன்செய்த உதவியின் அளவை உடையது அன்று; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
English Version106
மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.
பொருள்: குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது.
English Version107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு.
பொருள்: தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
English Version108
நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
பொருள்: ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.
English Version109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
பொருள்: முன் செய்த உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
English Version110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்: உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
பொருள்: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
English Version