இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

60. ஊக்கமுடைமை (Energy) குறள்கள்

591

உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

பொருள்: ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.

English Version

592

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

பொருள்: ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.

English Version

593

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

பொருள்: ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.

English Version

594

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க் முடையா னுழை.

பொருள்: சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

English Version

595

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

பொருள்: நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

English Version

596

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

பொருள்: எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

English Version

597

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றும் களிறு.

பொருள்: உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

English Version

598

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.

பொருள்: ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.

English Version

599

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

பொருள்: யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

English Version

600

உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.

பொருள்: ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.

English Version