திருக்குறள்
4. அறன்வலியுறுத்தல் (The power of virtue) குறள்கள்
31
சிறப்ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு?
பொருள்: அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?
English Version32
அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.
பொருள்: ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.
English Version33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல்.
பொருள்: செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
English Version34
மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்; ஆகுல நீர பிற.
பொருள்: ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
English Version35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
பொருள்: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.
English Version36
அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது பொன்றும்கால் பொன்றாத் துணை.
பொருள்: இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.
English Version37
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
பொருள்: பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
English Version38
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.
பொருள்: ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
English Version39
அறத்தான் வருவதே இன்பம்:மற் றெல்லாம் புறத்த; புகழும் இல.
பொருள்: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.
English Version40
செயற்பாலது ஓரும் அறனே: ஒருவற்கு உயற்பால தோரும் பழி.
பொருள்: ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே, செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.
English Version