திருக்குறள்
7. மக்கட்பேறு (The wealth of children) குறள்கள்
61
பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த மக்கட்பேறு அல்ல பிற.
பொருள்: பெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர மற்றப் பேறுகளை யாம் மதிப்பதில்லை.
English Version62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின்.
பொருள்: பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
English Version63
தம்பொருள் என்பதம் மக்கள்; அவர்பொருள் தம்தம் வினையான் வரும்.
பொருள்: தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
English Version64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.
பொருள்: தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிட மிக்க இனிமை உடையதாகும்
English Version65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.
பொருள்: மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்; அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும்.
English Version66
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.
பொருள்: தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்.
English Version67
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்.
பொருள்: தந்தை தன் குழந்தைகளுக்கு செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் குழந்தைகள் முந்தியிருக்கும்படியாக அவர்களைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
English Version68
தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
பொருள்: தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதைவிட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
English Version69
ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
பொருள்: தன் மகனை/மகளை நற்பண்பு நிறைந்தவர்கள் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவர்களைப் பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியைவிடப் பெரிதும் மகிழ்வாள்.
English Version70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.
பொருள்: மகன்/மகள் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை/இவளை மகனாகப்/மகளாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
English Version